என் மலர்
இந்தியா

மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
- அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது?
- 9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்?
கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தெரு நாய்க்கடி தொடர்பான விசயங்களில் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
நிறுவனங்கள், சாலைகளில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாற்றக்கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.பி. அஞ்சாரியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் தெரு நாய் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி விக்ரம் நாத், "கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத மாநிலங்களிடம் ஒவ்வொரு நாய்க்கடி, நாய்க்கடியால் உயிரிழப்பு அல்லது காயம் போன்றவற்றிற்காக பெரும் இழப்பீடு கேட்கப்படும். மேலும், தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது பொறுப்பும் கடமையும் நிர்ணயிக்கப்படும்.
இந்த விலங்குகள் மீது உங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது? இந்த நாய்கள் ஏன் தெருக்களில் சுற்றித் திரிந்து, மக்களை கடித்து பயமுறுத்த வேண்டும்?.
இவ்வாறு நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்.
மற்றொரு நீதிபதி மேத்தா "9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்? அந்த நாய்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.






