search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உள்ளாட்சி தேர்தல் வன்முறை பலி எண்ணிக்கை 15 ஆனது - உள்துறை மந்திரியை சந்திக்கிறார் மேற்குவங்காள ஆளுநர்
    X

    உள்ளாட்சி தேர்தல் வன்முறை பலி எண்ணிக்கை 15 ஆனது - உள்துறை மந்திரியை சந்திக்கிறார் மேற்குவங்காள ஆளுநர்

    • மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.
    • தேர்தல் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது.

    ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் 8-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அங்கு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. ஊரக பகுதிகளில் 73,887 இடங்ளிலும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஊராட்சி வார்டுகள் 63,229 ஒன்றிய வார்டுகள் 9730, மாவட்ட ஊராட்சி வார்டுகள் 928 ஆகும். இந்த தேர்தலில் 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

    வாக்குப்பதிவின் போது சுமார் 65,000 மத்திய காவல் படையினர், மாநில காவல் துறையை சேர்ந்த 70,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் உள்ளாட்சி தேர்தலில் பயங்கர வன்முறை நிகழ்ந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

    முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

    பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார்.

    தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன. திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.

    அரசியல் கட்சி தொண்டர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டுக் கொண்டனர்.

    பயங்கர வன்முறை காரணமாக மத்திய பாதுகாப்பு படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துமாறு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூச்பெஹர் மாவட்டத்தின் பாலிமரி கிராம பகுதியில் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர் மதாப் விஸ்வாஸ் கொல்லப்பட்ட தாக அந்த கட்சி குற்றம் சாட்டியது. இதே போல திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் பாபர் அலி, சபிருதீன், கணேஷ் சர்கர் ஆகியோரும் வன்முறையில் கொல்லப்பட்டனர். அவர்களது உயிரிழப்புக்கு பா.ஜனதாவே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்10 பேரும், பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா 3 பேரும், கம்யூனிஸ்ட்டு கட்சியைச் சேர்ந்த 2 பேரும் வன்முறைக்கு பலியானார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட தினத்தில் இருந்து மேற்கு வங்காளத்தில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் வன்முறை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×