search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது

    • ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்
    • தமிழகத்தில் முதல் நபராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓட்டு போட்டார்

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

    நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, எம்.எல்.ஏக்கள் ஓட்டு போடுகின்றனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின்னர் மற்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிறது. அதன்பின் ஓட்டுப்பெட்டிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 60 சதவீதம் ஓட்டு பெற்று அவர் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    Next Story
    ×