search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்
    X

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்

    • 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
    • கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.

    தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

    இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.

    இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

    இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.

    மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.

    சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.

    இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×