என் மலர்
இந்தியா

அமெரிக்க விசா நிராகரிப்பு... பெண் மருத்துவர் உயிர் மாய்ப்பு!
- மருத்துவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் தகவல்.
- அமெரிக்கா செல்லும் கனவு தடைப்பட்ட நிலையில் மருத்துவர் உயிர்மாய்ப்பு.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற 38 வயது பெண் மருத்துவர், அமெரிக்க விசா மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பத்மாராவ் நகரில் ரோகிணி தனியாக வசித்து வந்தநிலையில், குடும்பத்தினர் அவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ரோகிணி வீட்டு பணிப்பெண்ணும் நீண்டநேரம் கதவை தட்டியுள்ளார். ரோகிணி கதவைத் திறக்காததால், அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இறந்தநிலையில் கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் மாய்ப்பு குறிப்பு ஒன்றையும் ரோகிணியின் அறையிலிருந்து எடுத்துள்ளனர். மருத்துவப் பணியில் கவனம் செலுத்தி வந்த ரோகிணி, அமெரிக்காவில் தனது எதிர்காலத்தை திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் விசா மறுக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.






