என் மலர்
இந்தியா

ஒரே நாளில் 70 கோடி பரிமாற்றம்- சாதனை படைத்த யுபிஐ
- நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
- கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
இதனை தொடர்ந்து, யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பயனர்கள் பாதிப்படுவார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகள் அமலான மறுநாளே யுபிஐ வரலாற்றில் புதிய உச்சமாக அதாவது ஆகஸ்ட் 2-ந்தேதி 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய பேமண்ட் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் சராசரியாக தினமும் 65 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறும் NPCI அடுத்தாண்டு தினசரி 100 கோடி பரிமாற்றங்கள் என்ற நிலை உருவாகும் என கணித்துள்ளது.






