என் மலர்tooltip icon

    இந்தியா

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். துஷில் போர்க்கப்பல் 9-ந்தேதி இந்திய கடற்படையில் இணைப்பு
    X

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். துஷில் போர்க்கப்பல் 9-ந்தேதி இந்திய கடற்படையில் இணைப்பு

    • மீண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டது.
    • ஐ.என்.எஸ். துஷில் என்பது கிர்விக் போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டதாகும்.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை ரஷியாவிடம் இருந்து தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் ரஷியாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் போர்க்கப்பல்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த போர்க் கப்பல்கள் 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரஷியா- உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக போர்க் கப்பல்கள் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டது. இதில் ஐ.என்.எஸ். துஷில் எனப்படும் போர்க் கப்பல் தயாரிக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் நிறைவு செய்யப்பட்ட நிலையில் வருகிற 9-ந்தேதி முதல் ஐ.என்.எஸ். துஷில் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாவலர் என்று அர்த்தம்.

    ரஷியாவில் கலினின் கிராட்டில் வருகிற 9-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஐ.என்.எஸ். துஷில் என்பது கிர்விக் போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டதாகும். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட தல்வார் மற்றும் தேக் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் பயன் பாட்டில் உள்ளன.

    இந்த போர்க்கப்பல் 125 மீட்டர் நீளமும், 3,900 டன் எடையும் கொண்டது. இது இந்திய மற்றும் ரஷிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. எதிரிகளின் ரேடாரில் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கடலில் நிலவும் எந்த சூழ்நிலையையும் இந்த கப்பல் சமாளிக்கும்.

    இந்த கப்பலில் 26 சதவீதம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திலும், 33 சதவீத அமைப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. இந்திய நிறுவனங்களான பிரமோஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் நோவா இன்டர்கிரேடட் சிஸ்டம்ஸ் ஆகியவை இந்த கப்பலின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.

    ஐ.என்.எஸ். துஷில் செயல்பாட்டுக்கு வந்ததும் மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் மேற்கு கடற்படையின் ஒரு பகுதியாக மாறும். இது கடற்படையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதோடு இந்தியாவிற்கும், ரஷியாவுக்கும் இடையிலேயான மூலோபாய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×