என் மலர்
இந்தியா

இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் கண்டனம்
- 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்டார்.
- அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது.
இது அவர் மீது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். தலைமை நீதிபதி கவாய் மிகவும் கருணையுள்ளவர். முழு தேசமும் அவருடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்"என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள கண்டன பதவில், ""உச்ச நீதிமன்றத்தில் இன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் இழிவானது. இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதல்.
தனது திறமை, நேர்மை மற்றும் விடாமுயற்சி மூலம் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை பதவிக்கு உயர்ந்துள்ள ஒரு தலைமை நீதிபதி, இந்த முறையில் குறிவைக்கப்படும்போது, அது மிகவும் கவலையளிக்கும் செய்தியை அனுப்புகிறது.
அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.






