என் மலர்
இந்தியா

மும்பையில் பயங்கரவாதிகள்.. 34 மனித வெடிகுண்டுகள் தயார் - மிரட்டல் விடுத்த ஜோதிடர் கைது
- 400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
- 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நேற்று வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விநாயகர் சதுர்த்தியின் நாளில் 10-வது நாளான இன்று (செப்டம்பர் 6) சிலைகள் நீரில் கரைக்கப்பட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த மிரட்டல் வந்திருந்தது.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபரை 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் அஸ்வனி குமார் (வயது 51) என்ற ஜோதிடர்.
பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் கடந்த 2023 இல் பாட்னா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஸ்வினி குமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வினி குமார் தனது நண்பனை பழிவாங்க திட்டம் தீட்டினார்.
அதன்படி நண்பரை பயங்கரவாதியாக சித்தரித்து போலீசில் சிக்க வைக்க மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அஸ்வினி குமாரிடமிருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், ஆறு மெமரி கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






