search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா பாஜக மாநில தலைவர் அதிரடி கைது - போலீஸ் நடவடிக்கை!
    X

    தெலுங்கானா பாஜக மாநில தலைவர் அதிரடி கைது - போலீஸ் நடவடிக்கை!

    • கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், கைது செய்வதற்கான காரணத்தை காவல் நிலையத்தில் வைத்து சொல்வதாக கூறி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    காவல் துறை துணை ஆணையர் துலா ஸ்ரீனிவாஸ் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் மாமியார் வீட்டில் இருந்த பந்தி சஞ்சய் குமாரை கைது செய்து பொம்மலா ராமரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    கைது நடவடிக்கையின் போது பந்தி சஞ்சய் வீட்டிற்கு விரைந்த பாஜக-வினர், போலீசாரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இருந்த போதிலும், காவல் துறையினர் பந்தி சஞ்சய் குமாரை கைது செய்தனர். பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    டிஎஸ்பிசி வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆதாரம் காண்பிக்க காவல் துறை சார்பில் பலமுறை பந்தி சஞ்சய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருமுறை கூட பந்தி சஞ்சய் குமார் ஆஜராகவில்லை, மாறாக தனது சட்ட வல்லுனர் குழுவை மட்டும் அனுப்பி வந்துள்ளார். சிறப்பு விசாரணைக்கு ஆஜராகாததே இவரின் கைதுக்கு காரணம் ஆகும்.

    இதுதவிர 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×