என் மலர்
இந்தியா

ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம்!
- தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
- 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகனுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த நிகழ்வில் தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியும் கலந்து கொண்டார்.
ஆனால் தேஜஸ்வி யாதவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேஜஸ்வியின் பதவி உயர்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரோகிணி ஆச்சார்யா, "அரசியலின் உச்சம் - ஒரு வகையில், ஒரு மனிதனின் புகழ்பெற்ற இன்னிங்ஸின் மகத்தான இறுதிப் போட்டி; தங்கள் கைகளில் பொம்மையாக மாறிய இளவரசரின் முடிசூட்டு விழாவிற்காக, அந்தச் ஜால்ராக்களுக்கும் 'ஊடுருவல் கும்பலுக்கும்' வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து திடீரென ஓய்வு எடுத்து, தனது தாய்வழி குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார் ரோகிணி ஆச்சார்யா.
தேஜஸ்வியின் அரசியல் பயணம்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தனது தந்தை கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோது கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளப்பட்டார். தேஜஸ்வி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015-ல் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணியில், 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்த துணை முதலமைச்சர் பதவியும், 2017-ல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறியபோது திடீரென முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணி முறிவு, தேஜஸ்வியை எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளியது. அப்போது ஆர்ஜேடி அமைப்பை மீண்டும் வலுப்படுத்திய தேஜஸ்வி, தனது தேர்தல் பிரச்சார உத்திகளைக் கூர்மைப்படுத்தி, பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு முதன்மையான சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2020 சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியை வழிநடத்திய தேஜஸ்வி அதிகாரத்தை கைப்பற்றவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 2022 ஆகஸ்டில் நிதிஷ் குமார் மீண்டும் மகா கூட்டணியுடன் இணைந்தபோது, தேஜஸ்வி இரண்டாவது முறையாகத் துணை முதல்வராகப் பதவியேற்றார். 2024-ல் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் இப்பதவி முடிவுக்கு வந்தது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இருப்பினும், கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.






