search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாயம்: பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தப்பட்டாரா?
    X

    காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாயம்: பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தப்பட்டாரா?

    • விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
    • ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை அவர் அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர். அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவர் கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×