என் மலர்
இந்தியா

உத்தரபிரதேசத்தில் மத்திய மந்திரி வீட்டில் வாலிபர் சுட்டுக்கொலை
- வினய் ஸ்ரீவஸ்தவா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- கொலை நடந்த இடத்தில் இருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் தாகூர்கஞ்ச் காவல்நிலையை எல்லைக்கு உட்பட்ட பெகாரியா கிராமத்தில் மத்திய மந்திரி கவுஷல் கிஷோரின் வீடு உள்ளது. இங்கு நேற்று இரவு 6 பேர் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வினய் ஸ்ரீவஸ்தவா என்பவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே வினய் ஸ்ரீவஸ்தவா சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்த தாகூர்கஞ்ச் போலீசார் விரைந்து வந்து கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட வினய் ஸ்ரீவஸ்தவா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பலியான வினய் ஸ்ரீவஸ்தவா மத்திய மந்திரி கவுஷல் கிஷோரின் மகன் விகாஸ் கிஷோரின் நண்பராவார். கொலை நடந்த இடத்தில் இருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.






