search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்தியபிரதேசத்தில் இருந்து எல்.முருகன் மீண்டும் மேல்சபை எம்.பி. ஆகிறார்
    X

    மத்தியபிரதேசத்தில் இருந்து எல்.முருகன் மீண்டும் மேல்சபை எம்.பி. ஆகிறார்

    • மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.
    • மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்கெனவே மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை மந்திரியாக பொறுப் பேற்றுக் கொண்டார்.

    பாராளுமன்ற மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் உறுப்பினர்களின் பதவிகளுக்கு அவ்வப்போது மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டு 68 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. அதன் அடிப்படையில் மத்திய மந்திரி எல்.முருகனின் பதவிக்காலமும் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இதையடுத்து புதிய மேல்சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் வருகிற 27-ந் தேதி நடத்துகிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.


    இதேபோல் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும் மத்தியபிரதேச பிரதேசத்தில் இருந்து உமேஷ் நாத் மஹராஜ், மாயா நரோ லியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மந்திய மந்திரி எல்.முருகன் 1977-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பிறந்தார். அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூர் ஆகும். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.

    2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தை பெற்றார். 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக பணிபுரிந்தார். 2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தார்.

    அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி வரை அவர் அப்பதவியில் இருந்தார். 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது எல்.முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் மத்தியபிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.

    Next Story
    ×