என் மலர்
இந்தியா

பா.ஜனதாவுக்கு எதிராக அதானி விவகாரத்தை பாமரர்களிடம் பரப்ப ராகுல் புது வியூகம்
- சென்னையில் 7 மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 68 மாவட்டங்களுக்கும் தகவல் சென்றுள்ளது.
- பா.ஜனதா அரசின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த ராகுல் புதிய வியூகம் ஒன்றை அமைத்துள்ளார்.
புதுடெல்லி:
அதானியின் நிறுவனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன.
ராகுல்காந்தியும் பாராளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் பாராளுமன்றமும் முடங்கியது. உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.
எதிர்பார்த்த அளவு இந்த பிரச்சினை மக்கள் மத்தியில் செல்லவில்லை என்று ராகுல் கருதுகிறார். எனவே இந்த விவகாரத்தை சாதாரண மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று பா.ஜனதா அரசின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த ராகுல் புதிய வியூகம் ஒன்றை அமைத்துள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் அதானி விழுந்தால் இந்தியாவின் பொருளாதாரம் வீழும் என்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதையும் அதானிக்கு கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு உதவி வருவதையும், அவரது மோசடிகளுக்கு துணை போவதையும் கிராமங்கள் வரை சென்று மக்கள் மத்தியில் புரிய வையுங்கள். உள்ளூர் ஊடகங்கள் மூலமும் தெரியப்படுத்துங்கள்.
அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாவட்ட, வட்டார அளவில் போராட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் எடுத்து சொல்லுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 7 மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 68 மாவட்டங்களுக்கும் தகவல் சென்றுள்ளது. மத்திய சென்னை மாவட்டத்தில் 6 சர்க்கிள் தலைவர்கள் தலைமையில் 6 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தலைவர் சிவராஜ் சேகரன் கூறினார். இதே போல் மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.






