search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: ரூ.1,241 கோடி சொத்துக்களுடன் பா.ஜ.க. வேட்பாளர் முதலிடம்
    X

    6-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: ரூ.1,241 கோடி சொத்துக்களுடன் பா.ஜ.க. வேட்பாளர் முதலிடம்

    • 411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
    • ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 5-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் குருஷேத்திரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக பிஜூ ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா ரூ.482 கோடி சொத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆம்ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ரூ.169 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்தது.

    வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டத் தேர்தலில் மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 338 பேர் (39 சதவீதம்) கோடீஸ்வரர்களாவர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடியாக உள்ளது.

    இத்தேர்தலில் 6 பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 48 பேரும் காங்கிரசை சேர்ந்த 25 வேட்பாளர்களில் 20 பேரும், சமாஜ்வாடியைச் சேர்ந்த 12 வேட்பாளர்களில் 11 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 வேட்பாளர்களில் 7 பேரும், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த 6 பேரும், ஆம்ஆத்மியைச் சேர்ந்த 5 பேரில் 4 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 141 பேர் மீது அதி தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில் ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.

    இதுவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். பணமாக 1 ரூபாயும் வங்கியில் சேமிப்பாக 1 ரூபாயும் வைத்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×