search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமரா பொருத்தி கண்காணிப்பு
    X

    பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமரா பொருத்தி கண்காணிப்பு

    • 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும்.
    • பாராளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று சபை கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் சபைக்குள் குதித்தனர்.

    அவர்கள் இருவரும் தங்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகை குப்பிகளை திறந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த புகை குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    புகை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவி குதித்து அங்கும் இங்குமாக ஓடினார். இதனால் எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில் சில எம்.பி.க்கள் மட்டும் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.

    மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த போதே பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகை குப்பிகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதற்கிடையே இவர்கள் 4 பேருடன் வந்திருந்த 2 பேர் தப்பி சென்றது தெரியவந்தது. அவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    6-வது நபரான லலித் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். அவரிடம் தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன. எனவே அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பாராளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் வழக்கமாக 4 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் உள்ளது. பாராளுமன்றத்துக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள வரவேற்பு அறையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்வார்கள்.

    அப்போது பார்வையாளர்களின் அடையாள அட்டை, கைப்பை, போன் போன்றவை ஆய்வு செய்யப்படும். போன் மற்றும் பைகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.

    2-வது கட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் பார்வையாளர்களின் நுழைவு சீட்டு ஸ்கேன் செய்து ஆய்வு செய்யப்படும். பார்வையாளர்களின் அடையாள அட்டை உண்மையானது தானா என்பதும் பரிசோதிக்கப்படும். மீண்டும் மெட்டல் டிடெக்டர் மூலம் பார்வையாளர்களை அங்கு சோதனை செய்வார்கள்.

    3-வது கட்டமாக பாராளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்கு பார்வையாளர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கும் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்படும். பார்வையாளர்களின் நுழைவு சீட்டு மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்படும்.

    4-வது கட்டமாக பார்வையாளர்கள் பாராளுமன்ற மாடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அதற்கு முன்னதாக மீண்டும் ஒருதடவை பார்வையாளர்கள் சோதிக்கப்படுவார்கள்.

    இத்தகைய 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும். இந்த 4 கட்ட சோதனைகளையும் தாண்டி 2 இளைஞர்கள் புகை குப்பிகளை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியாக மாறி உள்ளது.

    இதையடுத்து பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் யாரும் இந்த கூட்டத்தொடருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவை, மாநிலங்களவை, பார்வையாளர் மாடம் மூடி சீல் வைக்கப்பட்டது.

    அதுபோல பார்வையாளர்களுக்கு நுழைவு சீட்டு வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்துக்குள்ளேயும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளில் இனி எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில புதிய பாதுகாப்பு அம்சங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி விமான நிலையங்களில் நடத்தப்படுவது போன்று முழு உடல் பரிசோதனைக்கான ஸ்கேனர் கருவிகள், எந்திரங்கள் பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.


    இது தவிர பார்வையாளர்கள் அனைவரையும் இனி முழுமையாக சோதிக்க கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இருக்கைக்கும், பார்வையாளர்களின் மாடத்துக்கும் இடைப்பட்ட பகுதி மிக குறுகியதாக உள்ளது.

    இதைப்பயன்படுத்தி தான் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்களும் மிக எளிதாக சபை உள்ளே குதித்து விட்டனர். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வு நடப்பதை தடுப்பதற்காக பார்வையாளர் மாடத்தில் கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பாராளுமன்றத்துக்குள் மந்திரிகள், எம்.பிக்கள் நுழைய தனி வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஊழியர்கள், செய்தியாளர்கள் தனி வழியில் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மந்திரிகளின் உதவியாளர்களையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்று பாராளுமன்றம் கூடிய போது மந்திரிகள், எம்.பி.க்களுடன் வந்த உதவியாளர்கள் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    பாராளுமன்றத்துக்குள் வருபவர்களை கண்காணிக்க ஏற்கனவே ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. நேற்று நடந்த அத்துமீறலை தொடர்ந்து இன்று உடனடியாக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இதன் மூலம் பாராளுமன்றத்துக்குள் வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×