search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏழை மக்கள், பெண்களை மோடி அரசு நசுக்குகிறது - கார்கே
    X

    ஏழை மக்கள், பெண்களை மோடி அரசு நசுக்குகிறது - கார்கே

    • பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாஜன சபா என்ற பேரணி மற்றும் கூட்டம் திருச்சூரில் நடந்தது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள 25,177 வாக்குச்சாவடிகளின் பிரதி நிதிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பங்கேற்றார்.

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அரசால் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து செயல்படும் பொருளாதாரத்தை அவர் கற்பனை செய்தார்.

    ஆனால் இன்று மோடி தலைமையிலான அரசு அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது. பொதுத்துறைகள் நலிவடைந்தால் அதை மீட்டுக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் பொதுத்துறையை அழித்து தனியார் துறையை பலப்படுத்துவதில் மோடி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

    பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் கொள்கைகள் சிறுபான்மையினர் மற்றும் பெண்களை அதிகமாக பாதித்துள்ளது. மோடியின் அரசு மாநில அரசுகளை துன்புறுத்துவது மட்டுமின்றி, ஏழை மக்களையும் பெண்களையும் நசுக்குகிறது.

    மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிராக 51 குற்றங்கள் பதிவாகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது.

    மணிப்பூரில் நடந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நாட்டை அவமானப்படுத்தி உள்ளன. அங்கு 9 மாதங்களாக நடந்துவரும் வன்முறைகளுக்கு பிறகும், நிலைமையை தணிப்பதிலும், வடகிழக்கு மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கான சூழலை மீண்டும் ஏற்படுத்துவதிலும் பாரதிய ஜனதா அரசு தோல்வியடைந்துள்ளது.

    பிரதமருக்கு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவும், ஒருநாள் விட்டு ஒருநாள் உரை நிகழ்த்தவும் நேரம் உள்ளது. ஆனால் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நேரமில்லை.

    லட்சத்திவில் விடுமுறைக்காகவும், படங்களை கிளிக் செய்யவும் நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவருக்கு நேரம் இல்லை. இதன்மூலம் பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

    காங்கிரஸ் கட்சி இருந்த போதெல்லாம் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், சமூகநலம், கல்வி மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்துள்ளது. ஜனநாயகம், அரசியல் சாசனம் மற்றும் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க காங்கிரஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

    கேரள மக்கள் எப்போதுமே கொள்கைகள், ஏழைகளின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அரசியல மைப்புக்காக நிற்கிறார்கள். எனவே கேரளாவை வென்றால் இந்தியாவை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×