என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் களைகட்டும் பிரசாரம்- நடிகர் சுதீப்பின் சாதிவாரியான 4 சதவீத ஓட்டு பா.ஜ.க.வுக்கு கை கொடுக்குமா?
    X

    கர்நாடகாவில் களைகட்டும் பிரசாரம்- நடிகர் சுதீப்பின் சாதிவாரியான 4 சதவீத ஓட்டு பா.ஜ.க.வுக்கு 'கை' கொடுக்குமா?

    • காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    • பிரபல நடிகர், நடிகைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதால் கர்நாடகா அரசியலில் பா.ஜ.க. முந்தி செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது.

    கர்நாடகாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் பொம்மையை பிரபல நடிகர் சுதீப் திடீரென சந்தித்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். பா.ஜ.க. சார்பில் எங்கும் போட்டியிட போவதில்லை கட்சியிலும் சேரப் போவதில்லை என்றார்.

    நடிகர் சுதீப்பின் முடிவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சக நடிகரான பிரகாஷ்ராஜ் மற்றும் ரசிகர்கள் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் சுதீப் சித்ரா துர்கா மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவர் வால்மீகி நாயக்கர் இனத்தை சேர்ந்தவர். வால்மீகி நாயக்கர் இனத்திற்கு கர்நாடகாவில் 4 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. இந்த ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு கை கொடுக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    முந்தைய கால கட்டங்களில் நடிகர் சுதீப் பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்ததால் முதலில் காங்கிரஸ் கட்சி சுதிப்பை தன் பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது.

    அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரசார் சற்று கலக்கமடைந்துள்ளனர்.

    சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிகைகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் தேர்தல் பிரசாரத்திற்கு நடிகர் நடிகைகளை வரவழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் பிரபலமாக உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் சுமலதாவின் மகன் அபிஷேக் அம்ரித், தர்ஷன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    பிரபல நடிகர், நடிகைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதால் கர்நாடகா அரசியலில் பா.ஜ.க. முந்தி செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×