search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு- 6 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை
    X

    ஜம்மு காஷ்மீரில் துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு- 6 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

    • ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
    • 6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.

    ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியம் (ஜே.கே.எஸ்.எஸ்.பி.) இந்த சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை நடத்தியது. ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விசாரணை குழுவை நியமித்தது. இந்த விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.

    ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 33 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆகஸ்டு 5-ந் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. இன்று 33 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

    ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் கர்ணால், மகேந்தர்கர், ரேவாரி ஆகிய பகுதிகளிலும், குஜராத்தில் காந்தி நகரிலும், உத்தர பிரதேசத்தில் காசியா பாத்திலும், கர்நாடகாவில் பெங்களூரிலும், டெல்லி யிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

    6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.

    ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜஹாங்கீர், ஜே.கே.எஸ்.எஸ்.பி.யின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோக்குமார் ஆகியோர் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்தும் 2-வது கட்ட சோதனை இதுவாகும்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜம்மு, ரஜோரி, சம்பா மாவட்டங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் சதவீதம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது. வினாத்தாள்களை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அவுட் சோர்சிங் செய்வதில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஜே.கே.எஸ்.எஸ்.பி. அதிகாரிகள், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் சிலர் இந்த முறைகேடு சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×