என் மலர்
இந்தியா

கேரளாவில் கனமழை நீடிப்பு- 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
- மண்சரிவு ஏற்பட்டபோது மாலாவின் கணவர் குமார், குழந்தைகள் ஸ்ரீநிதி, ஸ்ரீஹரி, ஸ்ரீராம் ஆகியோர் வீட்டில் இல்லை.
- 20 குடும்பங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்தமாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதிலிருந்தே மாநிலத்தின் அனைத்து மாவடட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கனமழை கொட்டியது.
இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து பல மாவட்டங்களில் பலத்த மழைபெய்து வருகிறது. கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது.
இன்று வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(27-ந்தேதி) வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்டு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் மூணாறில் மண் சரிவு ஏற்பட்டதில் மாலா(வயது42) என்ற பெண் பலியானார். மாலா தனது வீட்டின் சமையலறையில் நேற்று மாலை சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது 20 அடி உயரத்தில் இருந்து அவரது வீட்டின் மீது மண் சரிந்து விழுந்தது. இதனால் மாலா மண்ணுக்குள் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மூணாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த மாலாவை மீட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மண்சரிவு ஏற்பட்டபோது மாலாவின் கணவர் குமார், குழந்தைகள் ஸ்ரீநிதி, ஸ்ரீஹரி, ஸ்ரீராம் ஆகியோர் வீட்டில் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 3 குழந்தைகளும் மாலாவின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்த படியே இருந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த 20 குடும்பங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. எர்ணாகுளத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
கனமழை காரணமாக கோட்டயத்தில் உள்ள பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார். இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தேவிகுளம் தாலுகாவில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டன. மேலும் இடுக்கி மாவட்டத்தில் இரவு நேர பயணத்துக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்தார்.






