search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயிகள் பேரணி எதிரொலி-  2 ஸ்டேடியங்கள் சிறைச்சாலைகளாக மாற்றம்
    X

    விவசாயிகள் பேரணி எதிரொலி- 2 ஸ்டேடியங்கள் சிறைச்சாலைகளாக மாற்றம்

    • டெல்லிக்கு செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
    • டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) 'டெல்லி சலோ' பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அழைத்து பேசியது. மத்திய உணவு மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை.

    இதையடுத்து மீண்டும் 12-ந்தேதி (இன்று) பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 3 மத்திய மந்திரிகள் விவசாயிகளுடன் பேச தயார் நிலையில் உள்ளனர்.

    ஆனால் பேச்சு வார்த்தைக்கு வர விவசாய சங்க பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டிக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில போலீசார் செய்து வருகிறார்கள். டெல்லிக்கு செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

    அம்பாலா ஜிந்த், ப்தே ஹாபாத் ஆகிய மாவட்ட எல்லைகளை மூடி உள்ளனர். அரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய தள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் குறுஞ்செய்திகளுக்கான செல்போன் சேவை தடை கொண்டு வரப்பட்டு உள்ளது. செல்போன் சேவைகள் 13-ந் தேதி வரை முடக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    டெல்லிக்குள் சென்று போராட திட்டமிட்டு இருக்கும் அரியானா விவசாயிகள் இன்றே தங்களது பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரியானாவில் பல இடங்களில் இன்று காலை விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடைபயணமாகவும் டெல்லியை நோக்கி புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல பஞ்சாபில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இரு மாநில விவசாயிகளும் பல்வேறு முனைகளில் டெல்லிக்குள் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து டெல்லி போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    அரியானா விவசாயிகள் டெல்லிக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. டெல்லிக்கு புறப்படும் விவசாயிகளை உடனுக்குடன் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டால் அவர்களை அடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 2 பெரிய ஸ்டேடியங்கள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. விவசாயிகளை அந்த ஸ்டேடியங்களில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்டேடியங்களில் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் பேரணி நடத்துவதை தடுக்கும் மத்திய அரசையும், அரியானா மாநில அரசையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டித்துள்ளார். விவசாயிகள் வரும் பாதைகளில் தடுப்புகள் ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயல் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் மறைமுகமாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    Next Story
    ×