என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலைக்கு பக்தர்களுடன் சென்ற அரசு பஸ் கவிழ்ந்தது: ஒரே இடத்தில் நடக்கும் 3-வது விபத்து
    X

    கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை படத்தில் காணலாம்.

    சபரிமலைக்கு பக்தர்களுடன் சென்ற அரசு பஸ் கவிழ்ந்தது: ஒரே இடத்தில் நடக்கும் 3-வது விபத்து

    • பம்பையில் இருந்து நேற்று பக்தர்களுடன் திருவனந்தபுரம் சென்ற ஒரு அரசு பஸ் மன்னார்குளஞ்சி பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
    • சபரிமலை சீசன் தொடங்கிய 2 மாதத்தில் மன்னார்குளஞ்சி பகுதியில் நடக்கும் 3-வது விபத்து இதுவாகும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து தற்போது மகரவிளக்கு விழா நடந்து வருகிறது.

    மகர ஜோதியை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். நடை திறந்த நாள் முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் பக்தர்கள் சன்னிதானத்தில் 18-ம் படி ஏற பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதற்காக கேரளா வரும் பக்தர்கள் சபரிமலை செல்ல அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருவோர் அரசு பஸ்கள் மூலம் பம்பை சென்று அங்கிருந்து சபரிமலைக்கு செல்கிறார்கள். இவ்வாறு பம்பையில் இருந்து நேற்று பக்தர்களுடன் திருவனந்தபுரம் சென்ற ஒரு அரசு பஸ் மன்னார்குளஞ்சி பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை. பஸ்சில் இருந்த பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    கேரள பஸ் கவிழ்ந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் இதுபோன்ற விபத்து ஏற்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அதற்கு முன்பும் இதே இடத்தில் ஆந்திர பக்தர்கள் வந்த பஸ் விபத்தில் சிக்கியது. சபரிமலை சீசன் தொடங்கிய 2 மாதத்தில் மன்னார்குளஞ்சி பகுதியில் நடக்கும் 3-வது விபத்து இதுவாகும். எனவே இந்த இடத்தில் விபத்தை தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×