search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்
    X

    சபரிமலையில் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்

    • அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவின் பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நாளை நடக்கிறது.
    • மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறினர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி நேற்று முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டதால் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது.


    அதே நேரத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.16-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவின் பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நாளை நடக்கிறது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அதே நேரத்தில் மகர விளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை மறுநாள் (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. திருவாபரணத்தை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

    Next Story
    ×