search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடிக்கு தெலுங்கானா உணவுகளை சமைத்து அசத்த தயாராகும் பெண்
    X

    யாதம்மாவையும், அவர் உணவு சமைப்பதையும் படத்தில் காணலாம்.


    பிரதமர் மோடிக்கு தெலுங்கானா உணவுகளை சமைத்து அசத்த தயாராகும் பெண்

    • என்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களுக்கு தினமும் கூலி மட்டுமே 20 ஆயிரம் வரை செலவாகிறது.
    • பல அரசியல் கட்சி மாநாடுகளுக்கும், கட்சி கூட்டங்களுக்கும் நான் தான் உணவு தயாரித்து கொடுக்கிறேன் என்கிறார் யாதம்மா.

    ஐதராபாத்:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நாளை (2-ந் தேதி) முதல் 4-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    மேலும் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அனைத்து மாநில பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் என சுமார் 300 முதல் 400 பேர் வரை கலந்துகொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவர் பண்டி சஞ்சய் இதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் தெலுங்கானா வகை உணவு தயார்செய்து வழங்க முடிவு செய்தார்.

    இதற்கான பொறுப்பை கரீம் நகரை சேர்ந்த பெண் சமையல் கலைஞர் யாதம்மாவிடம் ஒப்படைத்தார். இது யாதம்மாவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு சமையல் செய்து கொடுத்து அசத்த இருக்கும் யாதம்மா மகிழ்ச்சி பொங்க கூறியதாவது:-

    நான் ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். அந்த காலம் போய் தற்போது ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு சமைத்து போடும் நிலைக்கு வந்துள்ளேன். இப்போது என் வாழ்க்கை சந்தோஷமாக செல்கிறது. தற்போது என் கையால் செய்யும் உணவை பிரதமர் மோடியே சாப்பிட போகிறார் என நினைக்கும் போது எனக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    கொண்டாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சந்திரய்யாவுக்கு என்னை சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனக்கு வெங்கடேஷ் என்னும் மகன் பிறந்தான். திருமணமாகி 3 வருடங்களிலேயே எனது கணவர் உயிரிழந்து விட்டார்.

    அதன்பிறகு மாமியார் கொடுமை காரணமாக கைக்குழந்தையுடன் கரீம் நகருக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் சில மாதம் ஆயாவாக பணிபுரிந்தேன். எனக்கு சமையல் நன்றாக தெரியும் என்பதால் பணக்காரர்கள் வீட்டிலும், அரசியல்வாதிகள் வீட்டிலும் சில நாட்கள் சமையல் செய்தேன்.

    அப்போது வெங்கண்ணா என்னும் சமையல் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் சமையல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் உதவியாளராக இருந்த போது எனக்கு 15 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

    அதன்பிறகு நானே தனியாக சில பண்டிகை நாட்களுக்கும், திருவிழாக்களுக்கும் சமையல் செய்து கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தேன். எனது சமையலின் சுவையை அனைவருமே புகழ்ந்தனர்.

    தற்போது என்னை நம்பி 100 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குகிறேன். என்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களுக்கு தினமும் கூலி மட்டுமே 20 ஆயிரம் வரை செலவாகிறது. பல அரசியல் கட்சி மாநாடுகளுக்கும், கட்சி கூட்டங்களுக்கும் நான் தான் உணவு தயாரித்து கொடுக்கிறேன்.

    இதனால் கட்சி பாகுபாடு இன்றி பல அரசியல்வாதிகள் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கும் என்னையே சமையல் பணிக்கு அழைக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் கண்டிப்பாக சமையல் பணி இருக்கும்.

    என்னிடம் சமையல் கற்றுக்கொண்ட பலர் கேட்டரிங் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தங்கும் விடுதிகளுக்கும் சமையல் செய்து கொடுக்கிறார்கள். தற்போது எனது மகன் எம்.பி.ஏ. முடித்து விட்டு எனக்கு உதவியாக கணக்குகளை பார்த்து வருகிறார். கொடுக்கல் வாங்கல்களை அவர் கவனித்து கொள்வார்.

    வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கூட நான் சமைத்து கொடுக்கும் உணவை பார்சல் செய்து எடுத்துச் செல்கிறார்கள். நான் சமைக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டையுமே சாப்பிட்டவர்கள் சமையல் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஐதராபாத் வர உள்ள பிரதமர் மோடிக்கு தெலுங்கானா மாநில ஸ்பெஷல் உணவு வகைகளை தயாரித்து கொடுத்து அசத்த உள்ளேன். இந்த பெருமையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×