search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி ரூ.163 கோடி திருப்பித்தர நோட்டீஸ்: தவறினால் கட்சியின் சொத்துகள் முடக்கப்படும்
    X

    ஆம் ஆத்மி ரூ.163 கோடி திருப்பித்தர நோட்டீஸ்: தவறினால் கட்சியின் சொத்துகள் முடக்கப்படும்

    • வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
    • 10 நாட்களில் இந்த பணத்தை தர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசு, அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் கட்சியின் அரசியல் விளம்பரங்களை அரசு செலவில் வெளியிடுவதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, கடந்த 2016-ம் ஆண்டு, புகாரை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

    அக்குழு, ஆம் ஆத்மியிடம் இருந்து விளம்பரத்துக்கான செலவை டெல்லி அரசு வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை, அரசியல் விளம்பரங்களுக்கு டெல்லி அரசின் பணம் ரூ.97 கோடியே 15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதற்கு பிந்தைய விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகையால், இத்தொகை ரூ.99 கோடியே 31 லட்சமாக உயர்ந்தது.

    இதற்கிடையே, அரசியல் விளம்பரங்களை வெளியிட்டு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக, ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்குமாறு கடந்த மாதம் 20-ந்தேதி டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார்.

    இதை பின்பற்றி, தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் (டி.ஐ.பி.), ேநற்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    அதில், அரசியல் விளம்பரங்களுக்கு செலவிட்ட அசல் தொகை ரூ.99 கோடியே 31 லட்சம், அதற்கான வட்டி ரூ.64 கோடியே 31 லட்சம் என மொத்தம் ரூ.163 கோடியே 62 லட்சத்தை டெல்லி அரசுக்கு திருப்பித்தருமாறு கூறப்பட்டுள்ளது.

    நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களில் இத்தொகைைய செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி செலுத்த தவறினால், கட்சியின் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் கவர்னரின் முந்தைய உத்தரவுப்படி எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது:-

    ஆம் ஆத்மியின் வங்கிக்கணக்கு முடக்கப்பட வேண்டும். விளம்பரத்துக்காக அரசுப்பணத்தை பயன்படுத்திய ஆம் ஆத்மி தலைவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து அதற்கான பணத்தை கைப்பற்ற வேண்டும்.

    ஏழை மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டிய பணம், ஆம் ஆத்மி தலைவர்களை விளம்பரப்படுத்திக்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×