என் மலர்
இந்தியா

ஆய்வுச் சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து- 5 மாணவர்கள் உயிரிழப்பு
- மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாநில தலைநகருக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் என்ற இடத்திற்கு வருடாந்திர பள்ளி ஆய்வுச் சுற்றுலா சென்றனர். அப்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள மலை பிரதேச மாவட்டத்தின் லாங்சாய் பகுதிக்கு அருகில் உள்ள பழைய கச்சார் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாநில தலைநகருக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் வீடியோ தொகுப்பை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் என். பிரேன் சிங், "பழைய கச்சார் சாலையில் இன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க மீட்புக்குழு, மருத்துவக் குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.






