என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு
    X

    ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு

    • ஐதராபாத்தில் இருந்து சென்னை வரை காசிபேட்டை மற்றும் நல்கொண்டா வழியாக 3 பழைய ரெயில் பாதைகள் உள்ளன.
    • புல்லட் ரெயில் இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் அந்தந்த நகரங்களை அடைய முடியும்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் இருந்து அண்டை மாநிலங்களில் உள்ள பெருநகரங்களுக்கு புல்லட் ரெயில் வசதிகளை வழங்கும் பணிகள் வேகம் பெற்று வருகின்றன.

    ஏற்கனவே ஐதராபாத், மும்பை அதிவேக பாதையின் விரிவான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு ஆந்திரா வழியாக 2 தனித்தனி அதிவேக புல்லட் ரெயில் பாதைகள் அமைப்பது தொடர்பாக இறுதி ஆய்வு சீரமைப்பு நடந்து வருகிறது.

    புல்லட் ரெயில் மணிக்கு அதிகபட்சமாக 350 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஐதராபாத் வழியாக சென்னை மற்றும் பெங்களூரு அதிவேக வழித்தடத்திற்கான இறுதி ஆய்வு பணிகளை மேற்கொண்ட ரெயில்வே துணை நிறுவனமான ரைட்ஸ் முதற்கட்ட சீரமைப்புகளை வகுத்துள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து சென்னை வரை காசிபேட்டை மற்றும் நல்கொண்டா வழியாக 3 பழைய ரெயில் பாதைகள் உள்ளன. ஐதராபாத் மற்றும் விஜயவாடா இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    இந்த 3 வழித்தடங்களில் புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது. காசிபேட்டை வழியாக இருந்தால் தூரம் அதிகமாக இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலை அல்லது நல்கொண்டா வழியாக 2 வழித்தடங்களை ஆய்வு செய்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளன.

    தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தபோது. அதிவேக புல்லட் ரெயில் வழித்தடங்கள் குறித்து விவாதித்தனர்.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் பாதை திட்டம் முடிந்ததும் ஐதராபாத்-சென்னை மற்றும் ஐதராபாத்-பெங்களூரு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஐதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு ரெயில் பயண நேரம் 12-13 மணிநேரம் ஆகும். புல்லட் ரெயில் இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் அந்தந்த நகரங்களை அடைய முடியும்.

    புல்லட் ரெயில் பாதை திட்டத்தில் தமிழகத்தில் 61 கிலோமீட்டர், ஆந்திராவில் 464 கிலோமீட்டர், தெலுங்கானாவில் 180 கிலோமீட்டர் பணிகள் நடைபெற உள்ளன.

    Next Story
    ×