search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி யங் இந்தியன் அலுவலகத்துக்கு சீல்- பாராளுமன்றத்தில் பதிலடி கொடுக்க சோனியா முடிவு
    X

    சோனியா காந்தி

    டெல்லி யங் இந்தியன் அலுவலகத்துக்கு சீல்- பாராளுமன்றத்தில் பதிலடி கொடுக்க சோனியா முடிவு

    • இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்தபோது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.
    • பாரம்பரியமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நடக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை வெளியிட்டு வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனராக கொண்ட யங் இந்தியன் நிறுவனம் கைப்பற்றியது.

    இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை முடிந்ததும், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இச்சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அமலாக்க துறையினர் நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியன் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

    அமலாக்க துறையின் அனுமதியின்றி இந்த அலுவலகத்தை யாரும் திறக்க கூடாது என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீசும், அலுவலக வாயில் முன்பு ஒட்டப்பட்டது.

    யங் இந்தியா அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:-

    இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்தபோது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். நாட்டு மக்களுக்கு சுதந்திர தீயை மூட்டவும், நாடு சுதந்திரம் பெறவும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முக்கிய பங்காற்றியது.

    இந்த பத்திரிகையை முடக்க ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது இல்லை. ஆனால் இப்போது ஆட்சியில் இருப்போர் இந்த பத்திரிகை மீது தேவையற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    பாரம்பரியமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நடக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காங்கிரசாரின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் காட்ட வேண்டும். அதோடு பாராளுமன்றத்திலும் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    யங் இந்தியன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவத்திற்கும், காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சோனியா வீட்டிற்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்ட சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று நடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் யங் இந்தியன் அலுவலக பொறுப்பாளர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியின் மேல் சபை தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை விசாரணைக்கு வருமாறு அமலாக்க துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அப்போது அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இதையடுத்து அவருக்கு மீண்டும் அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    Next Story
    ×