search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யார் தடுக்க முயன்றாலும் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவோம்: சித்தராமையா திட்டவட்டம்
    X

    யார் தடுக்க முயன்றாலும் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவோம்: சித்தராமையா திட்டவட்டம்

    • மாநிலங்களிடம் இருந்து தான் மத்திய அரசுக்கு வரிகள் செல்கின்றன.
    • கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    தேர்தலின் போது காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் கடந்த 11-ந்தேதி தொடங்கப்பட்டு விட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வருகிற 1-ந்தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் அன்னபாக்ய திட்டமும் அமல்படுத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் மாதந்தோறும் 2.16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கர்நாடகத்திற்கு தேவையாக உள்ளது.

    இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் அரிசி, கோதுமையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கர்நாடக அரசு, 10 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த விடாமல் மத்திய அரசு தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேசி வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்க நாங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். அரிசி கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் மத்திய அமைப்பு என மூன்று நிறுவனங்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். இந்த மூன்று அமைப்புகளும் மத்திய அரசுக்கு சொந்தமானவை.

    அந்த 3 நிறுவனங்களிடமும் அரிசி விலையை நாங்கள் கேட்டுள்ளோம். இந்திய உணவு கழகத்திடம் இருந்து அரிசி வாங்கினால் போக்குவரத்து செலவை சேர்த்து ஒரு கிலோ அரிசி ரூ.36.40-க்கு கிடைக்கும். ஆனால் அந்த நிறுவனம் அரிசி வழங்க முடியாது என்று கூறிவிட்டது. அதனால் அந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் டெண்டர் மூலம் அரிசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி வழங்க ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 92 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ.840 கோடி செலவாகும். இந்த செலவை ஏற்று அரிசியை கொள்முதல் செய்து வினியோகம் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்திய உணவு கழகத்திடம் போதுமான அரிசி கையிருப்பு இருந்தாலும், அதை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

    கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், ஏழைகளுக்கு அரிசி வழங்க கர்நாடக அரசுக்கு தேவையான அரிசியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் எடுத்துக் கூறலாம் இல்லையா?. 8 கிலோ அரிசி வழங்கி அத்துடன் மைசூரு பகுதியில் 2 கிலோ ராகி, வட கர்நாடக பகுதியில் 2 கிலோ சோளம் வழங்கப்படும். அடுத்த 6 மாதங்களுக்கு வழங்கும் அளவுக்கு இந்த உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது.

    பஞ்சாப் மாநில அரசுடன் தலைமை செயலாளர் பேசியுள்ளார். இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வருகிற 1-ந் தேதி முதல் 10 கிலோ அரிசி திட்டத்தை தொடங்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விஷயத்தில் யார் எவ்வளவு அரசியல் செய்தாலும், தடுக்க முயன்றாலும் நாங்கள் அதை பொருட்படுத்தாமல் 10 கிலோ அரிசியை வழங்கியே தீருவோம். ஏழைகளுக்கு அரிசி வழங்குவதில் மத்திய பா.ஜனதா அரசு அரசியல், அதுவும் விரோத அரசியல் செய்கிறது.

    மத்திய அரசு, நிலத்தில் நெல் சாகுபடி செய்து அரிசி உற்பத்தி செய்கிறதா?. அவர்கள் மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தான் கொள்முதல் செய்கிறார்கள். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி அடிக்கடி பேசுகிறார். நாம் இந்த கூட்டாட்சியில் தான் இருக்கிறோம். மாநிலங்களிடம் இருந்து தான் மத்திய அரசுக்கு வரிகள் செல்கின்றன. அதனால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மராட்டிய முதல்-மந்திரியுடன் பேசி தண்ணீர் திறந்துவிடுமாறு கேட்பேன். முதல்-மந்திரி பதவி விஷயத்தில் எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    Next Story
    ×