search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
    X

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

    • செந்தில் பாலாஜி ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்.
    • கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இரவு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை கூறி இருப்பதாவது:-

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார். அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. வழக்கின் விசாரணையிலும் அவர் முட்டுக்கட்டை போட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

    எனவே செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்கக் கூடாது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

    இவ்வாறு பதில் மனுவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருக்கிறார். எனவே சற்று நேரம் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.

    அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு தான் பதில் மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இப்படி காலதாமதம் செய்வதன் மூலமாக இந்த வழக்கு விசாரணையை அவர்கள் தாமதப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். நாங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம்' என்றனர்.

    இதையடுத்து நீதிபதிகள், 'பதில் மனுவை காலதாமதமாக தாக்கல் செய்திருப்பதால் எந்தவித பலனும் இல்லை' என்றனர்.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், 'கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்' என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், 'அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நாங்கள் இன்னும் படித்து பார்க்கவில்லை. எனவே எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை மே 6-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×