என் மலர்
இந்தியா

மதச்சார்பின்மை இருவழிப் பாதையாக இருக்க வேண்டும்.. Insta பிரபலம் கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்
- மதச்சார்பின்மை சிலருக்கு கேடயமாகவும், மற்றவர்களுக்கு வாளாகவும் இருக்காது.
- இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து விமர்சித்த 81 பேர் தேச விரோதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக பெண் இஸ்டா பிரபலம் பனோலியை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.
பனோலி புனே சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். இவருக்கு எதிராக கொல்கத்தாவில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஷர்மிஷ்தா பனோலிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
இதனால் தனது குடும்பத்துடன் தலைமறைவானார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் குர்கிராமில் கைது செய்யதனர்.
இந்நிலையில் பனோலிக்கு ஆதரவாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆபரேஷன் சிந்தூரின் போது, சட்ட மாணவி ஷர்மிஸ்தா தனது வார்த்தைகளை சிலருக்கு புண்படுத்தும் வகையில் வெளிப்படுத்தினார். தனது தவறை உணர்ந்த அவர், வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டார். மேற்கு வங்க காவல்துறை விரைவாக செயல்பட்டு, ஷர்மிஸ்தா மீது நடவடிக்கை எடுத்தது.
ஆனால் அரசியல் தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், சனாதன தர்மத்தை கேலி செய்தபோது லட்சக்கணக்கான கணக்கான மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஆழமான, கடுமையான வலியைக்கு என்ன பதில்? அவர்களின் மன்னிப்பு எங்கே? அவர்களின் விரைவான கைது எங்கே?
தெய்வ நிந்தனை எப்போதும் கண்டிக்கப்பட வேண்டும்! மதச்சார்பின்மை சிலருக்கு கேடயமாகவும், மற்றவர்களுக்கு வாளாகவும் இருக்காது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும்.
மேற்கு வங்க காவல்துறையை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நியாயமாகச் செயல்படுங்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து விமர்சித்த 81 பேர் தேச விரோதிகள் என கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






