என் மலர்
இந்தியா

பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராபர்ட் வதேரா
- பணமோசடி வழக்கில் கடந்த 8-ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
- அந்த சம்மனுக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தின் குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேரா விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்ட் வதேரா ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இதில் ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எப் நிறுவனத்திடம் இருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்ததாகவும் 2011-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
அரியானாவில் நிலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டதில் பணமோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அமலாக்கத்துறை கடந்த 8-ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை. இதையடுத்து, இரண்டாவது முறையும் அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.
முன்னதாக இதுதொடர்பாக பேசிய ராபர்ட் வதேரா, ''இந்த நடவடிக்கை என்னையும் எனது மைத்துனரும் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியையும் மவுனமாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி. இது மத்திய அரசின் சதித்திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது என தெரிவித்திருந்தார்.