மேற்கு வங்க ஆளுநராகும் ஆர்.என். ரவி? ஆனந்த போஸ் திடீர் ராஜிநாமா..

மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் நான் போதுமான நேரத்தைச் செலவிட்டுவிட்டேன்
மேற்கு வங்க ஆளுநராகும் ஆர்.என். ரவி? ஆனந்த போஸ் திடீர் ராஜிநாமா..
Published on

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் டெல்லியில் உள்ள லோக்பவனில் இன்றுமாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2022ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் 3.5 ஆண்டுகள் பதவியில் இருந்தநிலையில் இன்று திடீரென ராஜினாமா செய்தார்.

திடீர் ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஆளுநர் அலுவலகத்தில் நான் போதுமான நேரத்தைச் செலவிட்டுவிட்டேன்" என பதிலளித்துள்ளார். மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த போஸின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 

"அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சில அரசியல் நலன்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து ஆளுநருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதுதொடர்பாக அவர் என்னிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் மாண்பைச் சீர்குலைப்பதுடன், நமது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே தாக்குகின்றன. மத்திய அரசு 'கூட்டுறவு கூட்டாட்சி' (Cooperative Federalism) கொள்கைகளை மதிக்க வேண்டும். மேலும், ஜனநாயக மரபுகளைச் சிதைக்கும் வகையிலும் மாநிலங்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com