search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்குங்கள்: நிதிஷ் குமார்
    X

    50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்குங்கள்: நிதிஷ் குமார்

    • சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியாயமானதுதான்.
    • தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது.

    பாட்னா :

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

    இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், பாட்னாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 50 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு உச்ச வரம்பினை நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியாயமானதுதான். நாங்கள் எப்போதுமே இட ஒதுக்கீடுக்கு ஆதரவானவர்கள். ஆனால் 50 சதவீத இட ஒதுக்கீடு என்னும் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இந்த உச்ச வரம்பானது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் வாய்ப்புகளை இழக்கச்செய்கிறது.

    தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) அவ்வாறு அவர்களுடைய மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

    இவ்விரு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வசதி கிடைப்பதற்கு ஏதுவாக 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பினை உயர்த்தினால் நல்லது.

    பல்வேறு சமூகக்குழுக்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பை புதிதாக மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரச்சினையை பிரதமர் மோடியிடம் எடுத்துச்சென்றோம்.

    ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. நாங்கள் அந்த கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறோம். ஆனால் இதை தேசிய அளவிலும் செய்ய வேண்டியது அவசியம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.

    இவவாறு அவர் கூறினார்.

    இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அரவிந்த் குமார் சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், " ஏழைகளான உயர்சாதியினர் இட ஒதுக்கீடு பெறுவதில் மரியாதைக்குரிய முதல்-மந்திரி மகிழ்ச்சியாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர், அவர்களின் தற்போதைய கூட்டணிக்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளத்தின் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார். 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு அகற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அரசியல் சாசன வரம்புக்குட்பட்டு பீகாரில் அதைச்செய்யுங்கள். நாங்கள் வரவேற்கிறோம்" என கூறினார்.

    50 சதவீத இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பினை அகற்ற வேண்டும் என்ற குரலை முதலில் எழுப்பியவர் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×