search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அரசியல் பிரவேசம்: பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் மைசூர் மன்னர்
    X

    நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அரசியல் பிரவேசம்: பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் மைசூர் மன்னர்

    • மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்தவரை வேட்பாளராக பா.ஜ.க. களம் இறக்கி உள்ளது.
    • யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் வருகையின் மூலம் மைசூரு மன்னர் பரம்பரையின் அரசியல் பிரவேசம் மீண்டும் தொடங்கி உள்ளது.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று 72 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் கர்நாடக மாநிலம் மைசூரு-குடகு பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் அறிவிக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்தவரை வேட்பாளராக பா.ஜ.க. களம் இறக்கி உள்ளது.

    மைசூரை ஆண்ட அரச குடும்பத்தினர் சுதந்திரத்திற்கு பிறகும் தீவிர அரசியலில் ஈடுபட்டனர். இந்த மன்னர் பரம்பரையை சேர்ந்த ஸ்ரீகாந்த் துட்டா நரசிம்ம ராஜ உடையார் கடந்த 1984, 1989, 1993 மற்றும் 1996 ஆகிய 4 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். பின்னர் 1991, 2004-ம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

    இதையடுத்து கண்டதத்த ஸ்ரீகாந்த் துட்டா நரசிம்ம ராஜ உடையாரின் குடும்பத்தை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரை அரசியலுக்கு அழைத்து வருவதில் பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி செய்தனர். அவர்கள் அரச குடும்ப உறுப்பினர்களான பிரமோதா தேவி உடையார் மற்றும் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ஆகியோரை சந்தித்து தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி வந்தனர்.

    இதன் பலனாக யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவர் தற்போது மைசூரு-குடகு பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் என்பதால் எப்படியும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார் என்ற அடிப்படையில் இவர் தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டு உள்ளார்.

    யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் வருகையின் மூலம் மைசூரு மன்னர் பரம்பரையின் அரசியல் பிரவேசம் மீண்டும் தொடங்கி உள்ளது. குடகு, மைசூரு மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க மன்னர் பரம்பரையை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்பதால் இவரை தேர்தல் களத்துக்கு அழைத்து வர முயன்ற பா.ஜனதாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    Next Story
    ×