என் மலர்
இந்தியா

காலம் மாறும்போது தண்டனை நிச்சயம்- தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை
- தேர்தல் கமிஷன் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, நாட்டில் சமீப காலமாக நடந்த பல தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. மட்டுமின்றி தேர்தல் கமிஷனையும் குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தல், மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் போன்றவற்றில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி வந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் நடந்த முறைகேடுகளை குறித்து செய்தியாளர்கள் முன் அவர் வெளியிட்டார். அப்போது, தேர்தல் கமிஷன் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த தேர்தல் மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அது முதுநிலையோ இளநிலை அதிகாரியோ யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலம் மாறும்போது தவறிழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம். வாக்குகளை திருடுவது வெறும் முறைகேடு மட்டுமல்ல, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல்.
குற்றவாளிகளே கேட்டுக் கொள்ளுங்கள், காலம் மாறும்போது தண்டனை நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.






