என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
    X

    மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

    • மகாத்மா காந்தி ஊரக வேலை ஊரக திட்டம் போன்று மக்கள் நலப் பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும்.
    • மக்கள் நலப்பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

    புதுடெல்லி:

    தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப்பணியாளர் பணியிடங்கள் 2011-ம் ஆண்டு நீக்கப்பட்டது.

    இதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் பணியமர்த்தப்பட்டிருந்த 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வேலையின்றி தவித்தனர்.

    அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்ல் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. தமிழக அரசின் வாதங்களையும் மக்கள் நலப் பணியாளர்களின் வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

    இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் ஆட்சிகள் மாறினாலும் அவர்களது வேலைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    மகாத்மா காந்தி ஊரக வேலை ஊரக திட்டம் போன்று மக்கள் நலப் பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

    மக்கள் நலப் பணியாளர்கள் கூடுதல் ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

    இதற்கிடையே மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள போதிலும் அவர்களின் நலன் கருதி மீண்டும் பணி வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் தொடர்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×