என் மலர்
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயற்சி- பிரதமர் மோடி கண்டனம்
- 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
- கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி தனது கண்டனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், " உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஒவ்வொரு இந்தியரையும் கோபமடைய செய்துள்ளது.
கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். கவாய் அமைதி காத்தது நீதியின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு" என்றார்.






