என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு மே மாதம் வருகை
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு மே மாதம் வருகை

    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.
    • பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    தற்போது பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்தபடி உள்ளனர்.

    இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற மே மாதத்தின் மத்தியில் மாதாந்திர பூஜை நடைபெறும் போது சபரிமலைக்கு வர திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.

    சபரிமலை செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி, பின்பு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிலக்கல்லுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்லும் அவர், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம்போர்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    மேலும் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர்.

    Next Story
    ×