என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத் நகரில் பயங்கர குண்டு வெடிப்புக்கு சதி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தொடர்புடைய 2 பேர் கைது
    X

    ஐதராபாத் நகரில் பயங்கர குண்டு வெடிப்புக்கு சதி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தொடர்புடைய 2 பேர் கைது

    • கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஐதராபாத்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் உள்நாட்டில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இதனை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அதன்படி தெலுங்கானா, ஆந்திர புலனாய்வுத்துறை மற்றும் போலீசாருக்கு பயங்கரவாதிகள் ஐதராபாதில் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து இரு மாநில போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியில் பதுங்கியிருந்த சிராஜ் உர் ரஹ்மான் (வயது 29) என்பவரைக் கைது செய்தனர்.

    அவர் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான அமோனியா, சல்ஃபர், அலுமினியம் தூள் உள்ளிட்டவை கைபற்றப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ஐதராபாதைச் சேர்ந்த அவரது கூட்டாளி சையது சமீர் (28) கைது செய்யப்பட்டார்.

    ஐதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து இருவருக்கும் அறிவுறுத்தல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

    இவர்களுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் அடிப்படையில் இதில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஐதராபாத் நகரில் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு முன்பாக நகரின் வெளிப்பகுதியில் முன்கூட்டியே சோதனை அடிப்படையில் குண்டு வெடிப்பை நடத்தவும் இருவரும் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

    போலீசார் கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    சந்தேக நபர்கள், அந்நிய நபர்கள் நடமாட்டம், சந்தேக செயல்பாடுகள் தங்கள் பகுதியில் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×