என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி 29-ந்தேதி ஜப்பான்-சீனா பயணம்
    X

    பிரதமர் மோடி 29-ந்தேதி ஜப்பான்-சீனா பயணம்

    • பிரதமர் மோடி முதலில் 2 நாள் பயணமாக ஜப்பானுக்கு செல்கிறார்.
    • 7 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சீனாவுக்கு செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை வருகிற 29-ந்தேதி தொடங்குகிறார்.

    பிரதமர் மோடி முதலில் 2 நாள் பயணமாக ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

    மேலும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கிறார்கள். பிரதமராக மோடி 8-வது முறையாக ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு 31-ந்தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். அங்கு தியான்ஜின் நகரில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் மோடி ஜப்பான் பயணத்துக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் தியான்ஜினில் நடைபெறும். ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பயணம் செய்வார் என்று தெரிவித்து உள்ளது. மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    மேலும் மாநாட்டில் பங்கேற்க உள்ள ரஷிய அதிபர் புதின் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பயணம் செய்திருந்தார்.

    7 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சீனாவுக்கு செல்ல உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லையில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-சீனா தங்களது வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன.

    இதனால் பிரதமர் மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×