என் மலர்
இந்தியா

75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவி: பீகார் மாநில அரசின் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
- பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது. அக்டோபர் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து பீகார் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதுபோல காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதாதளம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலில் களம் இறங்க உள்ளது.
பீகாரில் ஆட்சியை கைப்பற்ற இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ள நிலையில் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு 75 லட்சம் பெண்களும் தாங்கள் விரும்பும் சுயதொழிலை தொடங்கிக் கொள்ளலாம். குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பணத்தை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சுய தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்கள் அந்த 10 ஆயிரம் ரூபாயை தங்களது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகார் மாநில பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சந்தை வழிகாட்டும் உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
இந்த தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்தக்கட்டமாக தொழிலை மேம்படுத்த ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து சமுதாய பெண்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த நிதி உதவி செய்யப்படும். இந்த நிதி உதவியை பெறும் பெண்கள் மகளிர் சுயஉதவி குழுவுடன் இணைந்து செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






