என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்- பிரதமர் மோடி பேச்சு
    X

    பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்- பிரதமர் மோடி பேச்சு

    • பஹல்காம் சம்பவம் இந்தியாவின் ஆன்மா மற்றும் ஒற்றுமையின் மீதான தாக்குதலாகும்.
    • பாகிஸ்தானில் பயங்கரவாத உள் கட்டமைப்பு மற்றும் பல விமான தளங்களை அழித்துள்ளோம்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.69,420 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

    சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் இன்று காலை கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

    இதற்காக சிக்கிமின் காங் டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி ஒரு மணிநேரம் முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் திடீரென்று ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் மத்தியில் மேற்கு வங்காளத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், சாலைகளில் கூடியிருந்த சிக்கிம் மக்களும் பா.ஜ.க. தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். மோசமான வானிலை காரணமாக மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

    சிக்கிம் 50 ஆண்டுகள் விழாவில் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். நம்சி மாவட்டத்தில் ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கையுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை, பயணிகள் ரோப் வசதி, வாஜ்பாய் சிலை உள்ளிட்டவற்றை மோடி திறந்து வைத்தார்.


    காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    சிக்கிம் மாநிலம் உதயமான 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்க விரும்பினேன். ஆனால் வானிலை அங்கு வரவிடாமல் செய்து விட்டது. மாநிலம் உதயமாகி 50-வது ஆண்டுகள் ஆவதையொட்டி சிக்கிம் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிக்கிம் வளமிக்க மாநிலமாகும். இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது. இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. சிக்கிம் சாகச விளையாட்டுகளின் மையமாக மாறும் ஆற்றலை கொண்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆபரேசன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    பஹல்காமில் பயங்கரவாதிகளின் செயல் மனித குலத்தின் மீதான தாக்குதல். தற்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.


    பஹல்காம் சம்பவம் இந்தியாவின் ஆன்மா மற்றும் ஒற்றுமையின் மீதான தாக்குதலாகும். இதற்கு பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாத உள் கட்டமைப்பு மற்றும் பல விமான தளங்களை அழித்துள்ளோம்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    பிரதமர் மோடி பிற்பகலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹர் மாவ்டடங்களில் நகர எரிவாயு வினியோக திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1,010 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டம் இதுவாகும்.

    இன்று மாலை மோடி அங்கிருந்து பீகாருக்கு செல்கிறார். மாலை 5.45 மணியளவில் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ரூ.1,200 கோடி செலவில் இது கட்டப்பட்டுள்ளது.

    பிஹ்தா விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.1,410 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.க்கு அருகில் பிஹ்தா பகுதி உள்ளதால் கல்வியியல் மையமாக திகழ்கிறது.

    நாளை காலை 11 மணியளவில் பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் அதிக மதிப்பு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    பல்வேறு 4 வழிச்சாலைகளையும் திறந்து வைக்கிறார். ரூ.1,330 கோடி மதிப்புள்ள கோன்நகர்-முகமது கஞ்ச் இடையேயான 3-வது ரெயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    முன்னதாக பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்துகிறார். பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். பீகார் மாநிலத்தில் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    பீகாரில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் மோடி உத்தரபிரதேசம் செல்கிறார். கான்பூரில் ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

    Next Story
    ×