search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது அரசை தூக்கி எறிவதாக பிரதமர் மோடி சொல்கிறார்: சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு
    X

    எனது அரசை தூக்கி எறிவதாக பிரதமர் மோடி சொல்கிறார்: சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

    • மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
    • எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மெகபூப்நகரில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடியும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மாநிலத்தின் மொத்த உற்பத்தி ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்திருந்தால், ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கும். ரூ.3 லட்சம் கோடி வருவாய் போய்விட்டது.

    இப்படி மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பது நியாயமா? நீங்களும் வேலை செய்வதில்லை. மற்றவர்களையும் வேலை செய்ய அனுமதிப்பது இல்லை. யாராவது கேள்வி கேட்டால், உங்கள் அரசை தூக்கி எறிவோம் என்கிறீர்கள்.

    பிரதமர் மோடி சொல்கிறார். ''சந்திரசேகர ராவ், உங்கள் அரசை தூக்கி எறிவேன்'' என்கிறார். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது?. உங்களைப் போல், நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையா? மக்கள் ஆதரவு இல்லாமலா ஆட்சி அமைத்துள்ளோம்?.

    என்ன காரணத்துக்காக ஆட்சியை தூக்கி எறிவீர்கள்?. ஒரு பிரதமர், மேற்கு வங்காளத்துக்கு சென்று, ''உங்கள் எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என்று பேச முடியுமா?. அவர் சொல்வாரா?

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களிடையே பிளவை ஏற்படுத்த சில திருடர்கள் வந்தனர். அவர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.

    யார் ஆள வேண்டும், யார் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மாநில அரசு, எந்த இடையூறும் இன்றி 5 ஆண்டுகள் ஆள அனுமதிக்கப்பட வேண்டும்.

    அற்ப அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் உயிர்நாடியையே பா.ஜனதா பாழாக்குகிறது. மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

    கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தெலுங்கானாவின் பங்கை அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×