என் மலர்
இந்தியா

அரசுமுறை பயணமாக உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி
- ரஷியா- உக்ரைன் கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது.
- பிரதமர் மோடி கடந்த மாதம் ரஷியா சென்றிருந்தது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதையடுத்து அந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.
இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ஏற்கனவே, பிரதமர் மோடி கடந்த மாதம் ரஷியா சென்றிருந்தார். இது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி வரும் 23ம் தேதி உக்ரைன் செல்கிறார்.
வரும் 21ம் தேதி போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்குப் பிறகு 23ம் தேதி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு செயலாளர் தன்மயா லால், "உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் (வெள்ளிக்கிழமை, 23ம் தேதி) உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பயணம், இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான சமீபத்திய உயர்மட்ட தொடர்புகளின் அடிப்படையில் அமையும்" என்று அவர் கூறினார்.






