என் மலர்
இந்தியா

மல்லிகார்ஜுன கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
- அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.
- கார்கே உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன்.
பெங்களூரு:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) கடந்த 2022-ம் ஆண்டு முதல் அகிய இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் இந்தியா கூட்டணியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது முதிர்வு காரணமாக கால் வலி, இருதய பிரச்சனைகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதய துடிப்பு சீரான நிலையில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேஸ்மேக்கர் பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்த பேஸ்மேக்கர் இருதயத் துடிப்பின் வேகத்தையும், சீரையும் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சிறிய, பொருத்தக்கூடிய மருத்துவக் கருவியாகும். குறிப்பாக இருதயத்தைத் தொடர்ந்து துடிக்க வைப்பதே இதன் முக்கிய பணியாகும்.
அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அவரது மகனும், கர்நாடக மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே கூறுகையில், பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. எல்லாம் சரியாக உள்ளது. நலமாக இருக்கிறார். மக்கள் கவலைப்பட தேவையில்லை. மக்களின் ஆசீர்வாதங்களால் அவருக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்கள் அக்கறை மற்றும் வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி, என்று எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கேவை, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அதுபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மந்திரிகள், இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கார்கே உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்கே அவர்களிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன். அவரது தொடர்ச்சியான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.






