என் மலர்
இந்தியா

உ.பி.யில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி... கல்யாண்சிங் பெயரில் மருத்துவமனைக்கு அடிக்கல்
- தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட மாநில கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.
- பிரதமர் மோடி புலந்த்சாகர் நகரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
புலந்த்சாகர்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட மாநில கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் சுமூக உறவை ஏற்படுத்தி தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது.
ஆனால் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி கடும் சலசலப்பை சந்தித்துள்ளது. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் எப்போது உடன்பாடு ஏற்படும்? என்ற கேள்விக்குறி நிலவுகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் விழாவை பிரமாண்டமாக நடத்திய கையோடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க பா.ஜ.க. தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகருக்கு சென்றார்.
பிரதமர் மோடி புலந்த்சாகர் நகரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லட்சக்கணக்கான தொண்டர்கள் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வழக்கமாக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அல்லது உத்தரபிரதேச மாநிலம் தனது வாரணாசி தொகுதியில் பிரசாரத்தை தொடங்குவார். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் நகரில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புலந்த்சாகர் நகருக்கு காரில் வந்தார். இதையடுத்து டெல்லியில் இருந்து நொய்டா வழியாக புலந்த்சாகர் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாலையின் இரு புறமும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
புலந்த்சாகர் நகருக்கு சென்றதும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். இது பிரதமர் மோடியின் பாராளுமன்ற தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் பிரசார தொடக்கம் என்பதால் லட்சக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் பங்கேற்றனர். சுமார் 5 லட்சம் தொண்டர்களை பா.ஜ.க. நிர்வாகிகள் திரட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பிரதமர் மோடி ரூ.19,100 கோடிக்கான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் பெயரில் மிகப்பெரிய மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டினார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.
2019-ம் ஆண்டு தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் 2 இடங்களில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற அப்னா தளம் கட்சி வெற்றி பெற்றது.
மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. 6 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தடவை பிரதமர் மோடி தனது பிரசாரத்தை புலந்த்சாகர் நகரில் இருந்து தொடங்கி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வீடியோ பிரசாரத்தை பா.ஜனதா இன்று தொடங்கியது. மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற கருப்பொருளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், பயன் அடைந்த மக்கள் குறித்த காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. சந்திரயான், ராமர் கோவில், நலத்திட்டங்கள் போன்றவையும் குறிப்பிட்டு பா.ஜனதா வீடியோ மூலம் பிரசாரம் மேற்கொண்டு உள்ளது. பிரதமர் மோடி கனவை மட்டும் விதைப்பவர் அல்ல. செயல் வீரராக திகழ்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






