என் மலர்
இந்தியா

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
- பாராளுமன்ற தேர்தலில் நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
- வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.
வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
நேற்றே வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இன்று காலை 9.30 மணிக்கு கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்துக்கு பிரதமர் மோடி சென்று கங்கை நதிக்கு பூஜை நடத்தினார். அவருக்கு நெற்றியில் புரோகிதர்கள் திலகமிட்டு பட்டு வஸ்திரம் அணிவித்தனர்.
அதன்பின் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி மனமுருக வேண்டினார். கங்கை நதிக்கு பூ, பால் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்தார். அதன்பின் கங்கை நதிக்கு கங்கா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு பிரதமர் மோடி கப்பலில் பயணம் செய்து நமோ காட் என்ற இடத்தில் உள்ள கால பைரவர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவரை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். அவர் காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தேர்தல் அதிகாரியிடம் பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மோடியுடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் சென்றார். மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர் பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.
பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஹர்தீப்பூரி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ராஷ்டீரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர், அப்னா தளம் (எஸ்) தலைவர் அனு பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கல் முடிந்ததும் பிரதமர் மோடி பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






