என் மலர்
இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. ஜனவரி 8ல் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்
- மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- தி.மு.க. சார்பில் வில்சன், செல்வகணபதி இடம்பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. பி.பி. சௌத்ரி தலைமையிலான கூட்டுக்குழுவில் மொத்தம் 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, ரன்தீப் சுர்ஜேவாலா இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் வில்சன், செல்வகணபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கூட்டுக்குழு உருவாக்கப்பட்ட நிலையில், இந்தக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற கூட்டுக்குழு மசோதா குறித்து விரிவான ஆலோசனை நடத்தி மூன்று மாத காலத்தில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட 12வது மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.






